“புதிய அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தல்”

(ஆர்.ராம்)

இலங்கைத்தீவில் சரித்திர ரீதியாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரித்தைக் கொண்டவர்களாக உள்ள நிலையில் ஒருமித்த நாட்டினுள் அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணத்தை மறுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஐ.நா.தீர்மானங்களுக்கு அமைவாகவும், சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவும் உள்நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக, அரசாங்கம் பொறுப்புக் கூறலைச் செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

போர் நிறைவுக்கு வந்து 12ஆண்டுகளாகின்ற நிலையிலும், ராஜபக்ஷ அரசாங்கம் போர் வெற்றி வாதத்தினை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றதோடு, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்விதமான சமிக்ஞைகளையும் காண்பிக்காது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் விவகாரங்களை அடுத்தகட்டத்திற்கு எவ்விதமாக நகர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது. 1949ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாது தற்போது வரையில் தாமதிக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான மக்கள். சரித்திர ரீதியாக குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள். ஆகவே தமிழ் மக்கள் சுயநிர்ண உரிமைக்கு உரித்துடையவர்கள். அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதனை தவிர்க்க முடியாது. 

பிரதமர்களான, டி.எஸ்.சேனாநாயக்க, ட்டலி சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிகளான, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஆகிய அனைத்து தலைவர்களும்; தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவும், அவருடைய சகேதாரரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியுள்ளார்கள். 

புதிய அரசியலமைப்புக்கான வரைபினை தயார் செய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவானது, எம்மைத் தொடர்பு கொண்டு, எமது அபிப்பிராயங்களை கோரியது. நாங்கள் எழுத்து மூலமாகவும் வாய்மொழிமூலமாகவும் எமது நீண்டகாலக் கோரிக்கையை தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம். 

ஆகவே அந்த நிபுணர்குழுவினால் வரையப்படும் புதிய அரசியலமைப்புக்கான வரைவு நியாயமான முறையில் தாமதமின்றி அமுலாக்கப்பட வேண்டும். 

இந்த விடயத்தில் தொடர்ச்சியாக தாமதங்கள் நிலவுமாக இருந்தால், அக்கருமத்தினை செயற்படுத்த முடியாது கைவிடும் நிலையே ஏற்படும். ஆகவே அவ்விதமான ஒரு நிலைமைக்குச் செல்வதற்கு நாட்டின் தலைவர்கள் இடமளித்துவிடக்கூடாது. 

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அடுத்த பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கி செயற்படுத்தவுள்ளதாக கூறியிருக்கின்றர். 

அவருடைய கூற்றின் பிரகாரம் ஒரு நியாயமான புதிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக் கருமம் தாமதமாகின்றபோது அது ஈற்றில் கைவிடப்படும் சூழலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். 

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாத நிலைமைகள் காணப்படாதுவிட்டால் பிரிக்கமுடியாத, பிளவடையாத ஒருமித்த நாட்டினுள் அவர்களின் உள்ளக சுயநிர்ணயத்தினை அங்கீகரிப்பதற்கு சம்மதமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாக அமையும். 

அவ்விதமான உள்ளக சுயநிர்ணயத்தினை மறுதலிக்கும் வெளிப்பாடானது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.

இதனைவிடவும், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேசத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை அவர்கள் நிராகரிப்பதாக தற்போது கூறினாரும் அது இயலாதகாரியமாகும். 

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதிலிருந்து அரசாங்கத்தினால் விலகி நிற்க முடியாது. 

மேலும், நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் என்பதற்கு அப்பால் நாட்டில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளமையை தரவுகள் தெளிவாக காண்பிக்கின்றன. 

இதற்கு முப்பது வருடங்களாக நடைபெற்ற போர் காரணமாக இருக்கின்றது. அதேநேரம், போர் நிறைவு பெற்றதன் பின்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டு முன்னோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

உள்நாட்டில் நிரந்தரமான சமாதானம், சமத்துவம், இனங்களுக்கான கௌரவமான வாழ்வு என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே உலகநாடுகளின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். பொருளாதார ரீதியாக முன்னோக்கி பயணிக்க முடியும். 

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது பொருளாதார ரீதியாக முன்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியமாகும். ஆகவே பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.