(ஆர்.ராம்)

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதிப்பாட்டை முன்னிறுத்துமாறும் வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆனின் (McLaughlin Anne) முன்மொழிவில் கொண்டுவரப்பட்ட இந்த முன்பிரேரணையில் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 

அப்பிரேரணையில்,  தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் விசாரணைசெய்யப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் கண்மூடித்தனமான குண்டுவீச்சு, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் ஆகியனவும் அடங்கும்.

இந்நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பல்வேறு சர்வதேச தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டது. 

அதில் மிகக் குறைந்த விசாரணைகள் மட்டுமே நடைபெற்றது மட்டுமல்லாது, விசாரணைகளை எதிர்கொண்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலர் இன்றும் இலங்கையில் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கிறார்கள்.

அத்துடன் அண்மைக்கால இலங்கை அரசியலமைப்பின் சீர்திருத்தங்களால் நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை பேரவையில் இலங்கை பற்றிய முக்கிய குழுவின் தலைவராக பங்குவகித்திருக்கும் இங்கிலாந்து இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் ஏனைய ஐரோப்பிய பங்காளிகளும் தமது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. 

அதேநேரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் இளையோர் அமைப்பு மேற்படி முன்பிரேரணையை கொண்டுவருவதற்கான  வலியுறுத்தல்களை பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான 50 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு பிரித்தானிய அரிசின் வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.