அச்சப்படும் அளவுக்கு துறைமுக சட்டமூலத்தில் எதுவும் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் அலிசப்ரி

By Digital Desk 2

21 May, 2021 | 03:18 PM
image

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

எதிர்க்கட்சி தெரிவிப்பதுபோல் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. இலங்கை பொருளாதாரத்தின் திருப்புமுனையாக கொழும்பு துறைமுக நகரம் அமையும். அதற்காக அனைவரும் ஆதரவளிக்கவேண்டும். மாறாக இதனை இல்லாமலாக்க முற்படக்கூடாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சில சலுகைகளை அந்த நாடுகளுக்கு செய்துகொடுக்கவேண்டும். இதற்கு முன்னரும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மகாவலி திட்டம், கொழும்பு திட்டம் போன்ற வேலைத்திட்டங்களின் போதும் இவ்வாறான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வாறான முறையே தற்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் 2019ஆகும் போது உலகில் 5 ஆயிரத்து 383 விசேட பொருளாதார வலயங்கள் அடைந்திருக்கின்றன. அவற்றில் சில வெற்றிகமாக செயற்பட்டுள்ளன. சில தோல்வியடைந்திருக்கின்றன. இவ்வாறான பொருளாதார வலயங்கள் அமைந்திருக்கும் மலேசியா, டுபாய், இந்தியா போன்ற நாடுகளுடனே நாங்கள் போட்டி போட இருக்கின்றது. எம்முடன் போட்டியிட இருக்கும் நாடுகளுக்கு நன்மையை ஏற்படுத்திக்கொடுக்கவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.

மேலும் காெழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் அரசிலமைப்புக்கு முரண் என்ற விடயத்தையே எதிர்க்கட்சியினர் பெரிதாக தெரிவித்து வருகின்றனர். சட்டமூலம் ஒன்று கொண்டுவரும் போது, அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் கடமை உயர் நீதிமன்றத்துக்கு இருக்கின்றது. அதனையே நீதிமன்றம் செய்திருக்கின்றது. அது தெரியாதவர்களே நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பெரிதாக கதைக்கின்றனர். 

அத்துடன் இந்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை அனுமதித்துக்கொள்ள முடியும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. அதன் பிரகாரம் நாங்கள் திருத்தங்களை மேற்காெண்டிருக்கின்றோம். ஆனால் கடந்த அரசாங்கம் 19ஆம் திருத்தத்தை  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தபோது அதில் 156 தடவைகள் அரசியலமைப்பை மீறி இருக்கின்றது. அப்போது இவர்களின் தேசப்பற்று எங்கு இருந்தது. அதேபோன்று மாகாணசபை திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தபோது, நீதிமன்ற உத்தரவையும் மீறி இவர்கள் திருட்டுத்தனமாக அனுமதித்துக்கொண்டனர். அப்போது அரசியலமைப்பு தொடர்பில் இவர்கள் கதைக்கவில்லை.

எனவே எதிர்க்கட்சி தெரிவிப்பதுபோல் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில்  அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.  கொழும்பு துறைமுக நகர திட்டம் இலங்கையின் பொருளாதாரத்தின் திருப்புமுனையாக அமையும். அதனால் இந்த சட்டமூலத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right