(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் இலங்கையர்கள் இரண்டாம் பிரஜைகளாக்கப்படுவார்கள். நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வாக்கமாட்டோம் என்பது  ராஜபக்ஷர்களது தேர்தல் கால  மேடைப் பேச்சாகும் என ஐக்கிய  தேசிய கட்சியின்  பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய வளங்கள்   என்பது  ராஜபக்ஷர்களுக்கு  தேர்தல் கால பிரசாரமாகும். கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்  சீன நாட்டு நிறுவனத்திற்கு முழுமையாக வழங்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில்  நாட்டின் பல தேசிய  வளங்கள் சீன  நிறுவனங்களுக்கு முறைக்கேடான வகையில் வழங்கப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பு துறைமுக நகர  அபிவிருத்தி செயற்திட்டங்கள் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டன.  இலங்கை அரசுக்கு  துறைமுக நிலப்பரப்பு சொந்தமாக்கப்பட்டு  ஒப்பந்தம் மறுபரீசீலனை செய்யப்பட்டது. இலங்கையின்  பொது நிர்வாக கட்டமைப்பிற்குள் கொழும்பு துறைமுக நகர  பரிபாலனம் உள்வாங்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கம்  அந்த ஒப்பந்தத்தை முழுமையாக மாற்றியமைத்து  கொழும்பு துறைமுக நகரத்தை  விசேட ஆணைக்குழு ஊடாக சீன நாட்டு நிறுனத்திற்கு தாரை வார்த்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திற்குள் இலங்கையர்கள் இரண்டாம் தரப்பினராக செயற்பட வேண்டிய நிலையினை  அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.

நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.கொவிட்-19 தாக்கத்தில் இருந்து  நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.  அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்களும், மத தலைவர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.