(எம்.மனோசித்ரா)

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்து நாட்டை முடக்காமலிருப்பதில் அர்த்தமில்லை. காரணம் இலங்கை பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையிலேயே உள்ளது. அரசாங்கம் இப்போது பணத்தை பற்றி சிந்திக்காது உயிர்களைப் பார்ப்பதிலேயே அவதானம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசி வழங்குவதற்கு அதிகளவு நேரத்தை செலவிடுவதை விட, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசி வழங்குவதற்கு அதிகளவு நேரத்தை செலவிடுவதை விட, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒரு மாதம் முழுவதும் நாட்டை முக்கியது. உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரிதொருவருக்கு பரவக் கூடிய வேகத்தைக் கொண்டுள்ள 14 நாட்களாவது நாட்டை முடக்க வேண்டும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்து நாட்டை முடக்காமலிருப்பதில் அர்த்தமில்லை. காரணம் இலங்கை பொருளாதாரம் ஏற்கனவே ஆழ்ந்த மந்தநிலையிலேயே உள்ளது. அரசாங்கம் இப்போது பணத்தை பற்றி சிந்திக்காது உயிர்களைப் பார்ப்பதிலேயே அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டை திறந்த வைத்திருக்க வேண்டிய காலத்தில் , மூடப்பட வேண்டிய காலத்தில் திறந்தும் வைத்திருப்பது அர்த்தமற்றது. கொவிட் வைரஸ் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாவாக உயர்வடையவில்லை. ஏதேனுமொரு வழியில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதே தற்போது அவசியமாகும்.

கொவிட் பரவலைக் கட்டுப்பத்துவதற்கான நடவடிக்கைகளே தற்போது எடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தடுப்பூசி வழங்குவதில் காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் இரு வாரங்களேனும் நாட்டை முடக்க வேண்டும். இவ்வாறு நாடு மூடப்படும் போது சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய ஒரு நாள் மாத்திரம் நாட்டை திறப்பது தவறல்ல.

ஒரு நாள் கூட திறக்காமல் தொடர்ச்சியாக ஒரு மாதம் நாட்டை முடக்கியமையினாலேயே இங்கிலாந்தில் இலகுவாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. வைரஸ் பரவக் கூடிய இரு வாரங்கள் என்ற காலத்தை அவதானத்தில் கொண்டு நாட்டை முடக்க வேண்டிய காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் புதுமையான வகையில் வீழ்ச்சியடைப் போவதில்லை. தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே உள்ளது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனவரி , பெப்ரவரி மாதங்களில் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்திருந்தால் , இன்று அவற்றை மக்களுக்கு வழங்கியும் முடித்திருக்கலாம்.

60 மில்லியன் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை அமெரிக்கா ஏனைய நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது. இதே போன்று 20 இலட்சம் மொடர்னா மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அமெரிக்கா நாட்டு மக்களுக்கு இலவசமாகவே வழங்கியது. சீனாவிடமிருந்து 250 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 65 கோடி தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது.

மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னரே தடுப்பூசிகளுக்கு விண்ணப்பித்ததால் அவற்றுக்கு தடுப்பூசிகளை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது. பல நாடுகளுக்கும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தினுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை கவனத்தில் கொள்ளுமா என்று என்னால் கூற முடியாது.

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சனத்தொகைக்கு அவற்றை வழங்குவதற்கு 200 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது. அந்த நிதியை திரட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.