(எம்.மனோசித்ரா)

புதிய வைரஸ் காரணமாக பாதிப்புக்கள் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகின்றேன். 

அவ்வாறு செய்தால் வைரஸ் பரவலை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

உருமாறிய கொவிட் வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றில் 3500 தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மாத்திரமின்றி , இதே போன்று 3 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். பாதிப்புக்கள் அதிகமுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. 

சமூகத்திலுள்ள தொற்றாளர்களால் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடையக் கூடும் எனவே மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுவதோடு , அநாவசிய காரணிகளுக்காக வெளியில் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒன்றரை இலட்சம் பேருக்கு தொற்றுதி

இது வரையில் நாட்டில் ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை 2780 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய தொற்றுறுதி செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 54 123 தொற்றாளர்களில் , ஒரு இலட்சத்து 23 532 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 29 540 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

27 வயது யுவதி தொற்றால் பலி

இதேவேளை நேற்று 36 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய யுவதியொருவர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலை தீவிரமடைந்தமை இவரது மரணத்திற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய 27 - 78 வயதுக்கு இடைப்பட்ட ஹொரன, எம்பிலிபிட்டி, மாத்தளை, பன்னல, ராஜகிரிய, கட்டுவ, செவனகல, தெலிகம, எஹெலியகொட, பேராதனை, பலப்பிட்டி, குன்னாபான, இமதுவ, ரத்கம, தல்கஸ்வல மற்றும் பயாகல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 16 பெண்களும்,

31 - 96 வயதுக்கு இடைப்பட்ட நாவலபிட்டி, புசல்லாவை, வென்னொருவ, இரத்மலானை, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊரபொல, நிக்கபொத்த, ஹொரனை, பண்டாரகம, இங்கிரிய, பேராதனை, கிங்தொட்ட, தல்பே, எல்பிட்டி, வஸ்கடுவ மற்றும் ஹேனகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1051 ஆக உயர்வடைந்துள்ளது.

மட்டக்களப்பில் 5 பகுதிகள் முடக்கம்

இதே வேளை இன்று காலை 6 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பாலமீன்மடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் , காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர், திருச்செந்தூர், நொச்சிமுனை (171ஏ) கிராம சேவகர் பிரிவின் பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்த மற்றைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் முடக்கப்பட்ட பகுதிகள்

கொழும்பில் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவில் 233 ஆவது தோட்டம், மகவத்தை வீதி, கொழும்பு 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன நேற்று காலை 7.30 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

மேலும் சில மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார். அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனன்கம்மன கிராம சேவகர் பிரிவு , வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவின் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு , கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ, கொறக்காபிட்டிய, மாவித்தார வடக்கு, பெலென்வத்தை மேற்கு, பெலென்வத்தை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவின் வில்லோரவத்தை மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவின் அரவ்வல, பமுனுவ கிராம சேவகர் பிரிவுகள் , கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தளை 473 கிராம சேவகர் பிரிவு , கட்டான பொலிஸ் பிரிவின் முஊ சில்வாபுர, கதிரான வடக்கு கிராமத்தின் அட்டபகஹவத்தை பிரிவு, கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேசகர்ம பிரிவு , மஹர பொலிஸ் பிரிவின் எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுண வடக்கு, மேல் கரகஹமுன வடக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசேட அறிவிப்பு

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசக் கோளாறு போன்ற கொவிட் தொற்று நோய் அறிகுறிகள் இருப்பின் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லுமாறும் அல்லது வைத்தியரின் ஆலோசனைகளைப் பெறுமாறும் கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.