(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின்  மீளாய்வு மனு மீதான ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க, சட்ட மா அதிபருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இறுதி சந்தர்ப்பம் வழங்கியது.

ஷானி அபேசேகர சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் குமார் ரத்தினம் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே குறித்த நீதிபதிகள் குழாம், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு ஆட்சேபனைகளை முன் வைக்க இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது.

நேற்றைய தினம் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா ஆஜரானார்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார்.

இதன்போது மன்றுக்கு விடயங்களை முன்வைத்த, மனுவில் பிரதிவாதி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொருப்பதிகாரி சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய,  ஷானி அபேசெகர தொடர்பிலான விசரணைகள்  முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

எனினும் மீளாய்வு மனுவின் மனுதாரர் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா அந்த கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பை முன் வைத்தார்.

 ' கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளசி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, இந்த நாட்டில் இடம் பெற்ற பல முக்கியமான வழக்குக்களின் விசாரணைகளை மேற்கொண்ட தலை சிறந்த விசாரணை அதிகாரியாவார்.   அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ள நிலையில் அவருக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது.  எனினும் அரசு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாமல்,  அவரது  பிணை மனு தொடர்பில் மிக அலட்சியமாக நடந்து கொள்கிறது. அது  மட்டுமன்றி இம்மனு தொடர்பில் பாராமுகமாக  இருந்து வருவது வருந்தத்தக்கது தலை சிறந்த ஒரு விசாரணை அதிகாரியான இந்த மனுதாரரை  பாதாள உலக கைதிகளை போன்று  நடத்துவதும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதும் மனிதாபிமானமற்ற செயல்பாடாகும்.' என சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா மன்றில்   வாதத்தை முன் வைத்தார்.

இதனையடுத்து குறித்த வாதம் தொடர்பில் அவதானம் செலுத்திய மேன் முறையீட்டு நீதிமன்ரின் சிரேஷ்ட நீதிபதிகளில் ஒருவரான நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான நீதிபதி குழாம்,  ஷானி அபேசேகரவின்  மருத்துவ அறிக்கைகளை இம்மாதம் 25ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட்டது.

அத்துடன் இந்த பிணை மனு தொடர்பில்  சட்ட மா அதிபர்  தரப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் இறுதித் தினமாக இம் மாதம் 28ம் திகதி தாக்கல் செய்யும்படியும் அன்றைய தினம் அரச தரப்பில்  ஆட்சேபனை தாக்கல் செய்தாலும் அல்லது செய்யாதுவிடினும் இந்த மீளாய்வு மனு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவித்தது. இதனையடுத்து இம்மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூன்  04ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, ஷனி அபேசேகர உட்பட மூன்று சி.ஐ.டி. அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சி.ஐ.டி. அதிகாரிகள் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு கடந்த 2020  டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி  நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றின் உத்தரவை மீளாய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷானி அபேசேகர உள்ளிட்ட இரு சி.ஐ.டி. அதிகாரிகள் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.