(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நாங்கள் வாக்குறுதி அளித்த பிரகாரம் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

அத்துடன் இந்த ஆயிரம் ரூபா சம்பளம் நிரந்தர தீர்வு அல்ல. அதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியானது எதிர்காலத்தில் மலையக பொருளாதார அபிவிருத்திக்கும் பயன்படும் என்ற நம்பி்க்கை எனக்கு இருக்கின்றது. மலையகத்துக்கு மாத்திரமல்ல, நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் உதவியாக இருக்கும். போட்சிட்டி கொழும்பில் அமைந்திருந்தாலும் முழு நாட்டினது அபிவிருத்திக்கும் பலமாக அமையும்.

அதேபோன்று பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கின்றனர். இதுதொடர்பாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் பலரும் தெரிவித்திருக்கின்றார்கள். ஆயிரம் ரூபா சம்பளத்தை நாங்கள் வாக்குறுதி அளித்த பிரகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அதனை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். 

இவ்வாறான நிலையில் சில தோட்டங்களுக்கு இதுதொடர்பில் சில பிரச்சினைகள் வரும். ஆரம்பமாக அரச தோட்டங்களுக்கு இந்த ஆயிரம் ரூபா அதிகரிப்பு வழங்கவில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார்கள். அந்த பிரச்சினையை நாங்கள் தற்போது முன்னுக்கு கொண்டுவந்துள்ளோம். இன்று நுவரெலியா மாவட்டத்தில் 150 தோட்டங்கள் இருந்தால் அதில் 10 தோட்டங்களில் பிரச்சினை இருந்தாலும் ஏனைய தோட்டங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பிரச்சினை இல்லாமல் வழங்கப்படுகின்றது என்பதை எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்கின்றது.

அத்துடன் தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபா சம்பளம் நிரந்தர தீர்வு அல்ல. நிச்சயமாக நாங்கள் ஒரு நிரந்தர தீர்வொன்றுக்கு செல்வோம். நாங்கள் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் தொழிற்சங்கவாதிகள். அப்படி இருக்கும்போது எங்களுக்கு என்று தொழிற்சங்க தமர்மம் என்ற ஒன்று இருக்கின்றது. அதனை நாங்கள் அதனை கன்னியமாக செய்தால் நிச்சியமாக எந்த தாேட்டத்திலும் பிரச்சினைகள் வராது என்றார்.