தேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது.

மூன்று தசாப்த காலமாக இருந்துவந்த எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து படைவீரர்கள் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றிக்கு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

இதன்போது இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 28,619 படைவீரர்கள் தாய் நாட்டுக்காக தங்களது உயிர்களை அர்ப்பணித்தனர். இருபத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனமுற்றனர். சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவர்களுக்காக தேசத்தின் மரியாதையை செலுத்தி படைவீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்கள் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

இலங்கை ரணவிரு அதிகாரசபையின் பதில் தலைவர் சோனியா கோட்டேகொடவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விமானப் படையினர் விமானம் மூலம் மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் வலயங்களை வைத்து படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.