(செ.தேன்மொழி)
நாட்டின் அண்மைகாலமாக இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வீட்டு கொள்ளைகள், தங்கச் சங்கிலி கொள்ளைகள் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அண்மைகாலமாக இடம்பெற்று வரும் தங்கச்சங்கிலி கொள்ளைகள் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை களனி குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மடபாத , கிருளபனை மற்றும் பேலியகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து , 15 பவுன் தங்க நகைகள் , 9 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், பெண்கள் அணியும் கடிகாரங்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை , வவுனியா, யாழ்பாணம் , வரக்காகொட மற்றும் ஆராச்சிகட்டு ஆகிய பகுதிகளில் நேற்று தங்க சங்கிலி கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.