(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள காலதாமதம் ஏற்படும் என்ற நோக்கிலேயே அரசாங்கம் பண்டிகை காலத்தில் கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார  பாதுகாப்பு வழிமுறைகளை தளர்த்தியது.

சுகாதார தரப்பினரது கோரிக்கைக்கு அமைய பண்டிகை காலத்தில் போக்குவரத்தினை மட்டுப்படுத்தியிருந்தால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது.

தேசப்பற்றாளர்கள் ஆளும் கட்சியாக வந்ததும் தேசத்துரோகிகளாகி விடுகின்றனர்: விஜயதாஸ  ராஜபக்ஷ | Virakesari.lk

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் 25 அத்தியாயங்கள் அரசியலமைப்பிற்கு முரன் என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.

அரச தலைவரும் அரசாங்கமும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பிற்கு முரன் அல்ல என குறிப்பிட்டு அரசாங்கம் பண்டிகை காலத்தில்  கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்தது.

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்வதற்கு கூட அரசாங்கம் பொது மக்களுக்கு காலவகாசம் வழங்கவில்லை.ஒரு நாளுக்குள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக 20 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாக அதிகாரங்கள் நாட்டின் பொது நிர்வாக கட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளமை ஒரு நாட்டில் இரு வேறுபட்ட சட்டத்தை அமுல்படுத்த வழி வகுக்கும் அத்துடன் தேசிய பாதுகாப்பு குறித்து இச்சட்ட மூலத்தில் எவ்வித விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.

சீனாவின் செயற்திட்டங்கள் நாட்டில் பெருவாரியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இச்சட்ட மூலத்தின் ஊடாக சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கு  பூகோளிய மட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தும். என்பதை மன்றில் குறிப்பிட்டேன்.

காணி தொடர்பான சட்டங்கள் மாகாண சபைகள் ஊடாக ஆராயப்பட்டு அதன்பிறகே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் .

2003 ஆம் ஆண்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட காணி சட்டமூலம், திவிநெகும சட்டமூலம் ஆகியவை இவ்வாறான பின்னணியில் ஆராயப்பட்டன.

நாட்டில் தற்போது மாகாண சபைகள் நிர்வாக செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் கொழும்பு துறைமுக சட்டமூலம் பாராளுமன்றில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.

காணி தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.கொழும்பு துறைமுக நகர விவகாரம் அவரது விடயதானங்களுக்கு  பொறுத்தமானதல்ல. இவ்விடயத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர சட்டமூலமத்தின் 25  அத்தியாயங்கள் அரசியலமைப்பிற்கு முரன் என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பினை மீறியுள்ள குற்றத்தை அரச தலைவரும், அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

துறைமுக சட்டமூலத்தில் 16 அத்தியாயங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடனும் நிறைவேற்ற முடியும் எனவும் மிகுதி 9 அத்தியாயங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்ற   முடியும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.இத்தீர்மானத்தின் அடுத்தக்கட்ட நகர்வை எதிர்பார்த்துள்ளோம்.

பலம்வாய்ந்த நாடுகளுக்கு இடையில் அதிகார போராட்டம் நிலவுகின்ற நிலையில் இலங்கை  ஒரு பலம் வாய்ந்த நாடான சீனாவிற்கு மாத்திரம் முன்னுரிமை  வழங்குவது நாட்டிற்கு பாரிய விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

புதுவருட கொவிட் கொத்தணிக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.பண்டிகை காலத்தில் இரண்டு வாரகாலத்திற்கு நாட்டை முடக்க வேண்டும். என சுகாதார தரப்பினர் அரச தலைவருக்கும்,அரசாங்கத்திற்கும் பல முறை எடுத்துரைத்துள்ளார்கள்.

நாட்டை முடக்கினால் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்று கருதி அரசாங்கம் சுகாதார தரப்பினரது கோரிக்கையினை கவனத்திற் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் நாட்டு மக்கள் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

 கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொள்ள வேண்டும்.நாட்டு பொருத்தமற்ற தேவையற்ற செயற்பாடுகளை விடுத்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.