(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழினம் அழிக்கப்பட்டமை உண்மையென ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்புக்கேட்கும் அளவிற்கு ஒரு சிங்கள தலைவருக்கேனும் தகுதி இல்லையெனவும், இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பிற்கான நியாயமும், நீதியும் சர்வதேசத்தின் மூலமாகவே கிடைக்கப்பெற வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்ததுடன், இப்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான  கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையில்  2006 ஆம் ஆண்டு தொடக்கம்  2009 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் இந்த மண்ணில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக  அழிக்கப்பட்டனர்  எனவும் குற்றம் சுமத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், இன்றைய நாள் ஈழத்தமிழர் வரலாற்றில் இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகும். இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை தாம் வெற்றி கொண்டதாகவும்,  அதன் மூலமாக நாட்டை கைப்பற்றியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தாரே தவிர யுத்தத்திற்கு பின்னர் சமாதானத்தை வெற்றிகொள்வதிலோ அல்லது சமாதானத்தை கட்டி வளர்ப்பதிலோ தங்களால் என்ன செய்ய முடிந்தது என்ற விடயத்தை அவரால் சபையில் முன்வைக்க முடியவில்லை. 

70 ஆண்டுகளாக இந்த மண்ணில் இனப்படுகொலைகள் இடம்பெற்று 12 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால்  வரையில் இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப்பும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்னாள் தனது சாட்சியத்தை பதிவு செய்திருந்தார். இவ்வாறு 12 ஆண்டுகள் கடந்து வந்திருந்தாலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தினமாக தமிழர்கள் நினைவுகொல்வதற்கும், நினைவுத் தூபிக்கு சென்று தமது உறவுகளை நினைப்பதற்கும்  தடுக்கப்படுகின்ற  ஒரு நாளாக அமைந்துள்ளது. எமது மக்கள் வணங்குகின்ற சாதாரண நினைவிடத்தைக்கூட  இராணுவத்தினரும் பொலிசாரும் அடித்து நொறுக்கி சிதைத்துள்ளனர். நினைவுத்தூபியின் அருகில் உள்ள சப்பாத்துக்கால்கள் இராணுவ சப்பாத்துக்கால்கள் என்பது ஊடகங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

 இன்று நேற்றல்ல  பல ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழர்கள் இன ரீதியாக அழிக்கப்பட்டனர். அவர்களின் நிலங்களில் இருந்து அவர்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். மீண்டும் அந்த மண்ணிலே அவர்கள் குடியேற்றப்படாது தடுக்கப்பட்டனர். இந்த அரசாங்கம் மட்டுமல்ல யு.என்.பி அரசாங்கம் கூட இதே இன அழிப்பு நடவடிக்கைகளை இந்த மண்ணில் செய்திருந்தனர். 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன  தலைமையிலான  அரசு பொறுப்பெடுத்த போதும் கூட 83ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் நேரடியாக இலக்குவைக்கப்பட்டு நேரடியான இன அழிப்பு செய்யப்பட்டது.

பொறுப்புள்ள சிங்கள தலைவர்கள் யாராவது ஒருவர், இந்த மண்ணில் உங்களால் நடைபெற்ற அநியாயங்களுக்கும் கொலைகளுக்கும் மன்னிப்புக் கூற தகுதி இருக்கின்றதா? எனவே எமக்கு நீதியும் நியாயமும் வேண்டும் அதுவும் சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.