(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நுவரெலியா  மாவட்டத்தில் கொவி்ட் தொற்று வேகமாக பரவி வருதற்கு பிரதான காரணம் அங்குள்ள லயன் முறையிலான குடியிருப்பு அமைப்பாகும். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை  25 கொரோனா மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக  வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை  2,500 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 25 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோன்று 9 கிராம சேவகர் பிரிவுகளில் 17ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்று பரவுவதற்கு அங்குள்ள லயன் முறையிலான குடியிருப்பே பிரதான காரணமாகும். லயன் அறைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் ஏனைய லயன் அறைகளில் இருப்பவர்களுக்கு அந்த தொற்று விரைவாக பரவி விடுகின்றது.

அத்துடன் நுவரேலியா மாவட்டத்தில்  ஒரு லயத்தில் சுமார் 50 முதல் 60பேர் வரை வசித்து வருகின்றனர். அதனால் கொவிட் தொற்று பரவும் வேகம் அதிகம். அவர்களுகான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகும். ஒரு லயத்துக்கு 2 மலசலகூடங்களே இருக்கின்றன. அதனைத்தான் கொவிட் தொற்றாளர்களும் தொற்று இல்லாதவர்களும் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது. அதனால்தான்  அங்கு தொற்று வேகமாக பரவுகின்றது என்றார். 

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலைக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை இயந்திரம் ஒன்று இல்லை என நாங்கள் தெரிவித்து வந்தோம். அந்த குறையை போக்க மாணிக்கவாசகர் என்ற தனவந்தர் முன்வந்திருக்கின்றார். அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.