(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத செயற்பாடுகளுடன் நான் தொடர்புபட்டவன் என்றோ அல்லது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவன் என்றோ ஆதாரங்களுடன் நிருபிக்க முடியுமென்றால் நீதிமன்றத்தில் அதனை நிருபித்து எனக்கு தூக்குத்தண்டனை பெற்றுக்கொடுங்கள். 

ஆனால் நான் செய்யாத குற்றத்திற்காக என்னை தடுப்புக்காவலில் வைத்திருந்து பழிவாங்க வேண்டாமென  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகள் மீதான  விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு என்னை அழைத்து வருவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. கடந்த முறையும் என்னை ஆயத்தமாகச் சொல்லிவிட்டு இறுதியாக அழைத்து வரவில்லை. அதற்காக பல காரணிகளை கூறியதாக அறிந்தேன். எனினும் என்னை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எனக்காக குரல் கொடுத்த சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த சபையில் நான் ஒரு குற்றவாளியைப்போல் நிற்கின்றேன். ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி, எந்தவொரு நீதிமன்றத்திற்கும் என்னை அழைத்து செல்லாது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் கூட என்னைப்பற்றிய கேள்விகளை கேட்காமல் நடுச்சாமத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது ஒன்றரை மணியளவில் எனது வீட்டுக்குள் புகுந்து, அதுவும் மதிலுக்கு மேலால் பாய்ந்து சில பொலிசார் உள்ளே புகுந்து என்னை கைதுசெய்து அழைத்து சென்றார்கள். என்னை கைது செய்வதற்கான எந்தவித காரணத்தையும் கூறாது என்னை அழைத்து சென்றார்கள். மக்கள் வாக்குகளின் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதியாக 20 ஆண்டுகளாக செயற்படும் என்னை எந்தவொரு குற்றமும் சுமத்தாது கைது செய்து மூன்று மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேக்கின்றேன்.

நான் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தின் முன்னாள் என்னை கொண்டுசெல்ல வேண்டும், அல்லது என்னை கைது செய்ய முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இது எதனையும் செய்யாது 22 நாட்கள் என்னை நான்காம் மாடியில் தடுத்து வைத்துள்ளனர். எனது அமைச்சின் செயலாளர் பெயர் என்ன, மேலதிக செயலாளர் பெயர் என்ன, அவர்களுடன் தொலைபேசியில் நீங்கள் பேசுவீர்களா என இவ்வாறான கேள்விகளே கேட்டுக்கொண்டுள்ளனர். என்னைப்போல் ஜனநாயக தலைவர்களை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்துள்ளனர், இதனை கண்டிக்கும் சிவில் பிரதிநிதிகள், மக்கள் அனைவரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், என் மீதான இவ்வாறான அடக்குமுறை நியாயமானதா என ஜனாதிபதியிடம் கேளுங்கள்.

மேலும், எனக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளுடன் நான் தொடர்புபட்டவில்லை என பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தெரிவுக்குழுவிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே என்னை பழிவாங்க வேண்டாம் எனவும் கூறினார்.