(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் சுயாதீனம் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாத்துக்கொள்ளவே உயிர் தியாகம் செய்து யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. ஆனால் அரசாங்கம் அந்த  உயிர் தியாகிகளை அகெளரவப்படுத்தும் வகையிலே நாட்டை காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சுயாதீனம் ஆட்புல ஒருமைப்பாடுக்காகவே நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. அன்று நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர்களின் நோக்கமாக இருந்தது, நாட்டின் சுயாதீனம் மற்றும் ஆட்புல ஒருமைப்பாடாகும். ஆனால் அரசாங்கம் நாட்டின் நாட்டின் சுயாதீனம் ஆட்புல ஒருமைப்பாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் துறைமுக நகர திட்டமிடல் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது.

மேலும் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு 12 வருடங்கள் நிறைவடையும் தினத்தில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கெளரவிப்பதற்கு பதிலாக, நாட்டை காட்டிக்கொடுக்கும் சட்டமூலம் ஒன்றையே அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிதிருக்கின்றது. அரசாங்கத்தின் வரலாற்றுத் துரோகம் இன்று வெளிப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் கொவிட் பிரச்சினைக்கு மத்தியில், அவசர அவசரமாக துறைமுக நகர திட்டமிடல் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அதனை அனுமதித்துக்கொள்ளவே முயற்சித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவித்து, நீதிமன்றம் சென்று வாதிட்டடிருந்தன. அதனடிப்படையில், அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு  சமர்ப்பித்திருக்கும் துறைமுக சட்ட மூலம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பது உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் அரசாங்கம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியதனாலே, மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தாமதமாகி இருக்கின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு வந்தபோது, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.