(இராஜதுரை ஹஷான்)

பேலியகொட மீன்சந்தையை  எக் காரணிகளுக்காகவும் மூடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான  முறையில் செயற்படுத்தி மீன் சந்தையின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மீன்பிடி அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

கொவிட் தொற்றால் எதிர்காலத்தில் எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் மீன்பிடித்துறையை உரியமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு, அமைச்சின் அதிகாரிகள், இதற்கு இணையான நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக சேவைகளையும் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக செயற்படுத்த இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுதாபனத்துக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

அத்துடன் சகல அத்தியாவசிய சேவைகள் மற்றும் மொத்த மீன் விநியோகத்துக்கு தேவையான வாகன அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பிடிக்கப்படும் மீன்களை வீணடிக்காமல் கொள்வனவு செய்வதற்கு, இலங்கை மீன்பிடி கூட்டுதாபனத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், 22 மீன்பிடி துறைமுகங்கள் ஊடாக மீன்களை கொள்வனவு செய்யவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு மீன்களை இலகுவாக கொள்வனவு செய்ய மீன்பிடி கூட்டுதாபனத்துக்குரிய நடமாடும் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.