லெபனாலிருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி ஆறு ரொக்கெட்டுகள் திங்கட்கிழமை பிற்பகுதியில் வீசப்பட்டதாகவும், எனினும் அவை வெற்றியளிக்கவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

லெபனானின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பீரங்கித் தாக்குதலுடன் பதிலளித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் நோக்கி இஸ்ரேல் 22 குண்டுகளை வீசியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் கூறியுள்ளது.

இருப்பினும் இதனால் உண்டான சேத விபரங்கள் கூறப்படவில்லை.

இது கடந்த வாரத்திலிருந்து எல்லை தாண்டி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது வன்முறைச் சம்பவம் ஆகும். கடந்த வியாழக்கிழமை, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி மூன்று ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன.

ஆனால் அவை மத்திய தரைக்கடலில் தரையிறங்கியதுடன், எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

லெபனானில் உள்ள சிறிய பாலஸ்தீனிய பிரிவுகள் கடந்த காலங்களில் இஸ்ரேல் மீது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.