(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு இன்று அதிகாலை முதல் தளர்ப்பட்ட போதிலும் , 11 மாவட்டங்களில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 3 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று மாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியதோடு, ஞாயிற்றுக்கிழமை பதுளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண்ணொருவர் உள்ளிட்ட 21 நபர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் தற்போதுள்ள நிலைமை அசாதாரணமானது என்றும் , எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் தீர்க்கமானவை என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று பதிவான தொற்றாளர்கள்

இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணிவரை நாட்டில் 2456 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 202 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 19 629 பேர் குணமடைந்துள்ளதோடு , 23 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிறன்று 21 மரணங்கள்

பதுளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஆணொருவர் உள்ளிட்ட 21 நபர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இமதுவ, முருத்கஹமுல்ல, அநுராதபுரம், மொரட்டுவை, மீரிகம, புளத்சிங்கள, நேபட, பதுளை, கெலிஓயா, ஹந்தபான்கொட, எம்பிலிபிட்டி, காலி, கடவத்தை, ஹாலிஎல, மஹயியாவ, காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 37 - 83 வயதுக்கு இடைப்பட்ட 16 ஆண்களும் , இங்கிரிய, யாழ்ப்பாணம், ஹபராதுவ, நாக்கியாதென்ன, களுத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 52 - 77 வயதுக்கு இடைப்பட்ட 5 பெண்களுமே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இலங்கையில் கொவிட் தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

11 மாவட்டங்களில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலான முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டன. அதனையடுத்து தொழிலுக்குச் செல்லும் அரச மற்றும் தனியார் துறையினர் தவிர ஏனையோர் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் வெளியிடங்களுகுச் செல்லும் முறைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை இன்றிலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11 முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையிலான இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த வாகனங்களுக்கும் இந்த காலப்பகுதியில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளை காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் 10 மாவட்டங்களில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , திருகோணமலையில் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , குருணாகலில் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , கம்பளையில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் , இரத்தினபுரியில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , காலியில் இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , அம்பாறையில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் , களுத்துறையில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மாத்தளையில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் நுவரெலியாவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதே வேளை திருகோணமலை, களுத்துறை, மட்டக்களப்பு, நுவரெலியா, கம்பஹா, பொலன்னறுவை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 37 பிரதேசங்கள் இன்று தனிமைப்படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு தொற்றுறுதி

மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் மாரவில வைத்தியசாலையில் 31 வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையால் குறித்த வைத்தியசாலையில் 4 பிரிவுகளும் , தீவிர சிகிச்சை பிரிவும் மூடப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவின் அவசர அனர்த்த பிரிவுகள் இரண்டும் , கர்பிணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேவை புரியும் தாதிகள் இருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து , வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமையயே வைத்தியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.