ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் சனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.

அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,  இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை. அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.

ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை   உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் சன அடர்த்தியும்கூட இடமளிக்காது.  

அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.

மேலும், பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல் முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும் என்றார்.