கொழும்பு துறைமுக நரத்தில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுச் சபை தயார் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.

நூறு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன  யாப்பா தலைமையில் பாராளுமன்றத்தில்  நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள இந்த கொழும்பு சர்வதேச நிதிசார் நிலையமானது அதன் முதலாவது கட்டத்தில் ஒரு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரம், இரண்டு உயர்முனை வதிவிடக் கோபுரங்கள் மற்றும் ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரண்டாவது கட்டம் இரண்டு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரங்கள், ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இதில் தேர்ச்சியற்ற தொழிலாளர் தேவைப்பாடு, உயர்நிலை வேலையாட்களின் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 75 வீதமானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 65 வீதமானவர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பல வரிச்சலுகைகள் வழங்கப்படும் இத்தகைய திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு நேரடியான பங்களிப்புக்களைச் செலுத்த வேண்டும் என முதலீட்டுச் சபைக்குச் சுட்டிக்காட்டிய அரசாங்க நிதி பற்றிய குழு, இதற்குத் தனது அனுமதியையும் வழங்கியது.

இதனைவிட, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உட்பகுதியில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கும் சிலோன் டயர் மெனுபக்ஷரிங் கம்பனி (பிரைவட்) லிமிடட் என்ற பெயரில் ஏற்றுமதித் தரத்திலான  டயர்களை  உற்பத்தி செய்யும் ஆலைக்கும் அரசாங்க நிதி பற்றிய குழு தனது அனுமதியை வழங்கியது. இத்திட்டம் 36  மாதங்களுக்குள் அது தனது வர்த்தகத் தொழிற்பாடுகளை  ஆரம்பித்தல் வேண்டும். இத்திட்டத்துக்காக நீண்டகால பாரிய வரிச் சலுகைகள் வழங்கப்படுவதால், இதனால் ஏற்படக்கூடிய  நன்மைகள் அடிமட்டத்தில் உள்ள  இறப்பர்  உற்பத்தியாளர்களுக்குச்  செல்லவிருப்பதாகவும்  முதலீட்டுச்  சபையின் தலைவர் கலாநிதி சஞ்சய மொஹட்டால, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சுட்டிக்காட்டினார்..

தற்பொழுது  நிலவும் கொவிட் 19  சூழ்நிலையில்  சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.