முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதற்கமைவாக  கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது.

இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத  நடவடிக்கைகளை அனுசரிக்காது   அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு தடை விதிக்கவில்லையென்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டவர்கள், அரசியல் பிரமுகர்கள் என சிலர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்றனர்.

அவர்களை பொலிசார், இராணுவத்தினர் வழிமறித்து, நினைவாலயத்திற்குள் நுழையக் கூடாதென வழிமறித்தனர். பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நீதிமன்ற உத்தரவு தமக்கு இன்னும் கிடைக்கவில்லையென பொலிசார் கூறி எவரும் இங்கு வர அனுமதி இல்லை என திருப்பி அனுப்பியுள்ளனர். நினைவுத்தூபிக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் நினைவேந்தல் தூபிக்கு அண்மையாகவும் இராணுவம் நிறுத்தபப்பட்டுள்ளனர்.