ஹரிகரன்

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் இப்போது சிக்கலானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலைமைக்குப் பெருமளவில் காரணமாக இருப்பது, இலங்கையில் இடம்பெற்ற போர், முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட முறை, மற்றும் அதன்போது இடம்பெற்ற  மீறல்கள் தான். போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்ற நாடுகளில் முக்கியமானது கனடா.

போரினால் இடம்பெயர்ந்து, பெருமளவான தமிழ் மக்கள் கனடாவில் தஞ்சம் பெற்றுக் கொண்டமையானது, அந்த நாட்டில் இலங்கை தொடர்பான, நிலைப்பாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. கனடாவில் வாக்குரிமை பெற்றுள்ள தமிழர்கள், அங்குள்ள அரசியலில் தீர்க்கமான செல்வாக்கை செலுத்துபவர்களாக மாறியுள்ளனர்.

அங்குள்ள பிரதான கட்சிகள், புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க முன்வந்துள்ளதுடன், தமிழர்களின் விருப்பங்கள், அபிலாஷைகளுக்கு அமைய செயற்படவும் தொடங்கியிருக்கின்றன. அதன் விளைவாகத் தான், பாராளுமன்றத்தில் ஒரு தமிழ்ப் பிரதிநிதியும், ஒண்டாரியோ சட்டமன்றத்தில் ஒரு தமிழ்ப் பிரதிநிதியும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஒண்டாரியோ சட்டமன்றத்தில், கடந்த 6ஆம் திகதி  ஆளும்கட்சி உறுப்பினர் விஜய் தணிகாசலம் கொண்டு வந்த 104ஆம் இலக்க தனிநபர் பிரேரணை தீர்மானமாக நிறைவற்றப்பட்டிருக்கிறது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் என்ற அந்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்தச் சட்டம் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனிடம், அரசாங்கத்தின் சார்பில் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன. அத்துடன், இந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதை ஒன்ராறியோவின் துணைநிலை ஆளுநர் மூலம், தடுக்குமாறும் அவர் கனேடிய அரசாங்கத்தைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.