ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பெண்கள் அடங்கலாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

மிரிஹான பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ஒரு ஆணும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று நுகேகோட கங்கொடவிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக மிரிஹான பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சூட்சுமமாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அங்கு விபசாரம் இடம்பெறுவதை உறுதி செய்து கொண்ட பொலிஸார் நீதிமன்றத்தின் சோதனைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். 

நேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த விடுதியின் நடத்துனரான மஹரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட பெண்கள், 22 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் முந்தல், மகியங்கனை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.