இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்வெய்டெக் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

ரோமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடாலும் மோதினர்.

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிச்.

மூன்றாவது செட்டில் நடால் அதிரடியாக ஆடி, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நடால் வெல்லும் 10 ஆவது பட்டம் இதுவாகும்.

இதேவேளை பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் போலாந்தின் இகா ஸ்வெய்டெக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

ஆட்டதின் இறுதியில் ஒன்பதாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வெய்டெக் இத்தாலிய ஓபன் பட்டம் வென்றார்.