2021 ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று, மாலைதீவில் தனிமைப்படுத்தபட்டிருந்த பெரும்பாலான அவுஸ்திரேலிய வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் சிட்னியில் தரையிறங்கியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கெடுத்த வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வர்ணனையாளர்களில் 38 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழுவில் பெரும்பான்மையானவர்கள் மாலைதீவிலிருந்து புறப்பட்டு இன்று காலை சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், பேட்ஸ்மேன் டேவிட் வோர்னர், மெக்ஸ்வேல், பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஏர் சீஷெல்ஸ் விமானத்தில் சிட்னியில் தரையிறங்கியவர்களில் அடங்குவர்.

தரையிறங்கிய பின்னர் வீரர்கள் சிட்னியில் உள்ள 14 நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்காக பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய மூன்று வீரர்கள் அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பயணத் தடைக்கு முன்னர் அவர்களில் போட்டியை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியிருந்தனர்.

இந்த மாதம் இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கில் பெரும்பாலான அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் நோயாளர்களின் அதிகரிப்பை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பயணிகளின் வருகையை அவுஸ்திரேலியா தடைசெய்ததை அடுத்து நாட்டுக்கு திரும்ப முடியாத அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழுவினர் மாலைதீவில் மே 6 முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.