(இராஜதுரை ஹஷான்)

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அத்தியாவசிய தேவைக்காக புகையிரதங்கள் விசேட சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக  புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 காலை 5 மணிக்கு கண்டி - கொழும்பு கோட்டை ,காலை 4.45 மணிக்கு மஹவ - கொழும்பு கோட்டை,காலை 5.50 மணிக்கு சிலாபம்- கொழும்பு கோட்டை, காலை 7 மணிக்கு பொல்வத்த - புத்தளம் ,காலை 4.30 மணிக்கு பெலியத்தை - மருதானை ஆகிய நேர அட்டவணை அடிப்படையில் அலுவலக மற்றும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படும்.

மாலை கொழும்பு கோட்டையில் இருந்து வெளி மாகாணங்களுக்கு செல்வதற்கும் விசேட புகையிரதங்கள்  சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய மாலை 5.45 மணிக்கு  கொழும்பு கோட்டை - கண்டி, மாலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை - மஹவ, மாலை 5.18 மணிக்கு கொழும்பு கோட்டை - சிலாபம் ,மாலை 4 மணிக்கு புத்தளம் - பொலவத்த ,மாலை 4 மணிக்கு மருதானை - பெலியத்தை  என்ற நேர அட்டவணையின் படி அலுவலக புகையிரதம் சேவையில் ஈடுப்படும்.

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் புகையிரத்த்திற்குள் தொடர்ந்து கடமையில் ஈடுப்படுவார்கள். தேசிய அடையாள அட்டை, அத்தியாவசிய சேவை தொடர்பில் நிறுவன பிரதானியால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் ஆகியவற்றை பயணிகள் தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

 பொது மக்கள் அநாவசிய பயணங்களுக்காக புகையிரத சேவையினை பயன்படுத்திக் கொள்வதை இயலுமான அளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பயணிகள் கட்டாயம் பின்பற்ற  வேண்டும்.பொறுப்பற்ற வகையில் செயற்படுத்தப்படும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.