(ஆர்.யசி)

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் சிறையில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த வாரம் கூடும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற அனுமதிக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்த கடிதத்தையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த மாதத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும்  18ஆம் 19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கூடவுள்ள நிலையில் இந்த அமர்வுகளின் போது  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான நீதிமன்ற வியாக்கியானம் அறிவிக்கப்படவுள்ளதுடன், சட்டமூலமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்  பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் மாத்திரம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரை சபை அமர்வுகளில் பங்குபற்ற அனுமதிக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

எனினும் அவர் சபைக்கு வருவதாயின் தற்போது கடைப்பிடிக்கப்படும் கொவிட் -19 சுகாதார கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய பங்குபற்ற வேண்டும் எனவும், அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளதுடன்,அனுமதி தொடர்பிலான சபாநாயகரின் எழுத்துமூல கடிதம் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள சிறைக்கைதியான  இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவும் இணக்கம் தெரிவித்தால் இந்த வாரம் கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்ற அனுமதிக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவரும் கொவிட் -19 வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய சபை அமர்வுகளில் பங்குபற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் அவருக்கான சபாநாயகரின் எழுத்து மூலமாக கடிதம்  சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு  இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.