(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்று அறிகுறிகள் ஏதேனும் காணப்படுபடுமாயின் அவ்வாறானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது பொறுத்தமற்றது.
எனவே அறிகுறிகள் காணப்படுபவர்கள் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னரே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பானர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் தொற்று ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கின்ற நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தொற்று அறிகுறிகள் காணப்படுபவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது பொறுத்தமற்றது.
காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் , அவர்களிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவும் அபாயம் ஏனைய தொற்றாளர்களைப் போலவே காணப்படும்.
எனவே ஏதேனும் அறிகுறிகள் காணப்படுபவர்கள் பரிசோதனைகள் ஊடாக தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு , அதன் பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நபரொருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் அவருக்கு தொற்று அறிகுறிகள் எவையும் இல்லையெனில் அல்லது சிறிதளவு அறிகுறிகள் காணப்படின் குறித்த நபருக்கு வைரஸால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களும் , அவரிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவும் வேகமும் 10 - 14 நாட்களில் குறைவடையும்.
எனவே வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமறிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்படுகின்ற தொற்று அறிகுறிகள் எவையும் இல்லையெனில் அல்லது சிறிதளவு அறிகுறிகள் தென்படுகின்ற தொற்றாளர்களை 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்புவோம். அதன் பின்னர் 4 நாட்கள் அவர்கள் வீடுகளில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கமைய தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவடைந்தததன் பின்னர் அவர்கள் வழமையைப் போன்று தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அதன் பின்னர் அவர்களை தொற்றாளர்களாக கருத வேண்டியேற்படாது என்றார்.