நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்வின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10,000 கட்டில்கள் எனும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்ட இளைஞர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள உன்னத பணியை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றனர்.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியத்தின் ஊடாக மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  பிரதேச  சம்மேளனங்கள் ஊடாக கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கான தலா 10 கட்டில்கள் உருவாக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச  செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச சம்மேளனங்களிலும் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி மிக சிறப்பாக  நடைபெற்று வருகின்றது.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகள் கலந்துக்கொண்டு குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.