காசா பகுதிக்கு இஸ்ரேல் குண்டுவீச்சு தொடர்ச்சியாக ஏழாவது நாளுக்குள் நுழைந்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விமானத் தாக்குதல்கள் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்களைக் கொன்றது, பலரை காயப்படுத்தியது மற்றும் குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது.

காசாவின் ஹமாஸ் தலைவரான யேஹியா அல்-சின்வாரின் வீடும் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக குழுவின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்வரும் ரொக்கெட் தீ பற்றி சைரன்கள் எச்சரிக்கை விடுத்ததால் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு சென்றனர். 

தங்குமிடங்களுக்கு ஓடும்போது சுமார் 10 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஹமாஸ் ரொக்கெட்டுகளைத் தடுக்க இஸ்ரேலிய இராணுவம் தனது “இரும்பு டோம்” வான் பாதுகாப்பு முறையையும் முன்னெடுத்தது.

கடந்த திங்களன்று வன்முறை தொடங்கியதில் இருந்து காசாவில் குறைந்தது 41 சிறுவர்கள் உட்பட 148 பேர் உயிரிழந்துள்ளதுடன், 950 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம்  இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் ஹமாஸ் தாக்குதல்களின் விளைவாக உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை காசா மீதான தாக்குதலை "தேவையான வரை" தொடருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சனிக்கிழமை தாமதமாக ஒரு தொலைக்காட்சி உரையில் உறுதிபடுத்தியுள்ளார்.

அண்மைய ஆண்களில் இஸ்ரேல் - பாலஸ்தீனுக்கிடையிலான மிக மோசமான வன்முறை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.