(எம்.மனோசித்ரா)

சீரற்ற காலநிலையுடன் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. எனவே வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் நபர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

அதற்கமைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புடன் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதென்பது இயல்பாகும். எனினும் இதனை துரிதமாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறிருக்க கடந்த சில தினங்களாக நாட்டில் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் கூட பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

பெருமளவானோர் ஒரு முகாமில் தங்க வேண்டியேற்படும் போது ஒருவருக்கு தொற்று காணப்பட்டால் கூட அது அங்குள்ள சகலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

எனவே முகாம்களின் தங்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதோடு , தமது குடும்பத்தாருடன் மாத்திரம் இருக்க வேண்டும். ஏனையயோரிடம் தனிநபர் இடைவெளியை பேணுவது அத்தியாவசியமானதாகும் என்றார்.