(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக 11,000 இற்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கேகாலை மண்சரிவில் நபரொருவரும் , காலியில் வெள்ளத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளம் காரணமாக 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சீரற்ற காலநிலை இன்றும் தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடும் மழை, வெள்ளம், பலத்த காற்று, மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்தமை உள்ளிட்ட அனர்த்தங்களால் கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இம் மாவட்டங்களில் 2750 குடும்பங்களைச் சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பத்தேகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள மக்கள் கடற்படையினரால் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.30 மணியவில் ஜின் கங்கையின் நீர்மட்டம் 5.02 மீற்றர் வரை உயர்வடைந்ததையடுத்து இப்பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

கம்பஹா

கம்பஹா மாவட்டத்தில் களனி, அத்தனகல்ல, வத்தளை, மஹர, திவுலபிட்டி, மினுவாங்கொடை, மீரிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் காரணமாக 1,385 குடும்பங்களைச் சேர்ந்த 6,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , இம் மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை, கம்புறுபிட்டி, திகாகொட, பிடபத்தர, அக்குரஸ்ஸ, கிரிந்த மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் , பலத்த காற்றினால் 663 குடும்பங்களைச் சேர்ந்த 2806 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 98 வீடுகள் பகுதியளவில் சேமடைந்துள்ளன.

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை, ரன்வெல்ல, புளத்கொஹூபிட்டிய, கேகாலை, வரகாபொல, அரநாயக்க, தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1132 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளர். இம்மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்தமை மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையால் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் ஜயவர்தபுர கோட்டை, சீதாவாக்கை, கடுவலை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் வெள்ளம் , மரம் முறிந்து விழுந்தமை காரணமாக 270 குடும்பங்களைச் சேர்ந்த 1,115 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 3 வீடுகள் மரம் முறிந்து விழுந்தமையால் சேதமடைந்துள்ளதோடு , வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 42 குடும்பங்கள் தற்காலிக நலன்புரி முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல்

குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பன்னல மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் காரணமாக 105 குடும்பங்களைச் சேர்ந்த 366 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை

களுத்துறையில் புளத்சிங்கள பிரதேச செயலகப்பிரிவில் கடும் மழை காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.

காலி

காலி மாவட்டத்தில் நாகொட பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் காரணமாக இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜாஎல பிரதேசத்தில் நிலம் தாழிறங்கும் அபாயம்

நேற்றை தினம் மழை சற்று குறைவடைந்துள்ளதன் காரணமாக அத்தனகஓயாவில் நீர் வழிந்தோடுவதால் ஜாஎல மற்றும் அண்மித்த பிரதேசத்தில் நிலம் தாழிறங்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு , காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் அராபு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக காங்கேசன்துறை மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை

மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 75 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் மத்திய மலை நாட்டிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலு;ம அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு  50 - 60 கிலோ மீற்றர் வரை உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.