நா.தனுஜா

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்ட ஆணையகத்திற்கான தேர்தலுக்கு வேட்பாளராக இலங்கையால் முன்மொழியப்பட்டிருக்கும் மொஹான் பீரிஸிற்கு ஆதரவாக ஏனைய நாடுகள் வாக்களிக்கக்கூடாது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியிருக்கின்றன.

இவ்விடயம் தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சர்வதேச அமைப்புக்களையும் சட்ட ஆட்சியினையும் சீர்குலைக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு முயற்சியாக இலங்கையானது ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்ட ஆணையகத்திற்கான தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை முன்மொழிவு செய்துள்ளது.

இவர் நாட்டினுடைய பிரதான சட்ட அதிகாரியாக இருந்த அவரது பதவிக்காலத்தில் வலிந்து காணாமல்போதல், படுகொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தத் தவறியமையால் அவர் தவறிழைத்தவராக உள்ளார்.

மொஹான் பீரிஸ் தற்போது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான உள்ளார். ஆனால் 2008 - 2011 வரை இலங்கையின் சட்டமா அதிபராகக் கடமையாற்றியுள்ளதுடன் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்வதற்கு அல்லது வழக்குத்தொடர்வதற்குத் தவறியிருக்கிறார்.

2013 இல் அவரது முன்னோடியான சிரானி பண்டாரநாயக்காவின் சட்டத்திற்கு முரணான அரசாங்கத்தின் பதவி நீக்கம் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில் தலைமை நீதிபதி பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நீக்கத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நீதித்துறை சுதந்திரம் மீதான ஒரு தாக்குதல் எனத் தெரிவித்தது. அத்துடன் இலங்கையின் உயர்நீதிமன்றம் இது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய சர்வதேச சட்ட ஆணையகமானது தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறல், நாடு கடத்தல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற விடயங்களில் தனது அண்மைய சில வேலைகளுடன் சர்வதேச சட்டங்களை முறைமைப்படுத்துகின்றது. அனைத்துச் சட்டவாளர்கள் மற்றும் நியாயமான உலக ஒழுங்கினைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இந்த மனிதருக்காக வாக்களிக்க வேண்டாமென ஐ.நா பொதுச்சபையின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மொஹான் பீரிஸினுடைய அவதானிப்பின் கீழ் மோசமான சர்வதேச குற்றங்கள் இலங்கைப் பாதுகாப்புப்படைகளால் புரியப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக எவரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் அவர் இலங்கையின் உயர் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டமையின் ஊடாக, இலங்கை பொறுப்புக்கூறலைப் புறக்கணிப்பது தொடர்பான ஒரு மோசமான சமிக்ஞையை ஏற்கனவே சர்வதேச சமூகத்திற்கு அனுப்பியது. அத்துடன் இன்னமும் நீதி வழங்கப்படாமல் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவானோரின் முகத்தில் விழுந்த அடியாகவும் அது அமைந்துள்ளது.

இந்த மனிதர் தலைமைதாங்கிய காலப்பகுதியில் இலங்கையில் பத்திரிகையாளர்கள் தமது பணியைச் செய்தமைக்காக கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டார்கள். அவரது மற்றும் அவரது அரசாங்கத்தினது பதிவுகளை வெள்ளையடிக்க உதவும் இந்த வேலைக்கான அவரது நியமனத்திற்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள ஊடக உரிமைகள் குழுக்கள் ஒன்றாக நிற்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.