( இராஜதுரை ஹஷான்)
புகையிரத சேவையாளர்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் வரை புகையிரத சேவையினை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம். புகையிரத சேவையாளர்களுக்கு 6000 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. பாதுகாப்பற்ற வகையில் புகையிரத சேவையில் ஈடுப்பட தயாரில்லை என புகையிரத கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் மனுஷ பீறிஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் புகையிரத சேவையாளர்கள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத சேவையில்  ஈடுப்பட்டார்கள்.

புகையிரத சேவையாளர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  புகையிரத திணைக்களத்திற்கும், போக்குவரத்து அமைச்சுக்கும் பல முறை கோரிக்கை விடுத்தோம். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

புகையிரத சேவையாளர்களுக்கு 6000 ஆயிரம் கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். இவரது கருத்து பேச்சளவில் மாத்திரமே காணப்படுகிறது.

புதுவருட கொவிட் கொத்தணி வைரஸ் தாக்கம் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தீவிரமாக பரவலடைந்துள்ளது. கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை விதிக்கப்பட்டது. நாளை முதல் பொதுபோக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புகையிரத சேவையாளர்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் வரை புகையிரத சேவையில் ஈடுப்படாமல் இருக்க தீர்மானித்துள்ளோம். இவ்விடயம் குறித்து அரசாங்கம் உறுதியான பதிலை வழங்க வேண்டும்.

மேலும், புகையிரத சேவையில் ஈடுப்படுபவர்களில் பெரும்பாலானோர் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். ஆகவே பாதுகாப்பற்ற முறையில் புகையிரத சேவையில் ஈடுப்பட தயாரில்லை என்றார்.