(எம்.மனோசித்ரா)

கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் அறிக்கைக்கு அமைய எதிர்வரும் சில வாரங்களில் கொவிட் வைரஸ் இலங்கையில் மிக வேகமாக பரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்க வேண்டும் என்று சுகாதார தரப்புக்கள் பரிந்துரைத்தால் அதனை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதனை மீள கட்டியெழுப்ப முடியும். ஆனால் மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை ஈடுசெய்ய முடியாது எனவே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவற்கு நாட்டை முடக்குவதைத் தவிர மாற்று தீர்வு இருப்பதாக தோன்றவில்லையெவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நேற்று வெள்ளிக்கிழமை காணொளியூடாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் அதில் மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்று இலங்கையிலும் , இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று இந்தியாவில் கறுப்பு பங்கசு (Black Fungus) என்ற பிரிதொரு நோயும் பரவ ஆரம்பித்துள்ளது. நாம் இதிலிருந்தும் பாதுகாப்படைய வேண்டும்.

குறிப்பாக கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் அறிக்கைக்கு அமைய எதிர்வரும் சில வாரங்களில் கொவிட் வைரஸ் இலங்கையில் மிக வேகமான பரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்திலேயே சகலருக்கும் தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருக்கும். அதுவரையில் நாம் அனைவரும் வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எனவே தற்போது மருத்துவ ஆலோசனைகளுக்கமைய தீர்மானங்களை எடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த ஆலோசனைக்கமைய நாட்டை முடக்க வேண்டும் என்று கூறினால் அதனையும் நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும். அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் மதிப்பிடுகளைச் செய்து , கொவிட் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை ஆராய முடியும்.

இதற்கு வேறு மாற்று வழிகள் உள்ளதா என்று என்னால் கூற முடியாது. வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்தால் மந்த நிலையிலுள்ள பொருளாதாரத்திற்கு மேலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும். எனவே தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தேவை அவசியமாகிறது. இதன் ஊடாகவே பொருளாதார பாதிப்பை குறைத்துக் கொள்ள முடியும்.

எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எம்மால் மீள சீரமைத்துக் கொள்ள முடியும். 

ஆனால் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்களை எம்மால் ஒரு போதும் ஈடு செய்ய முடியாது. உயிரை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமையாகும். இதன் அடிப்படையில் நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.