'காலா' பட நடிகர் லிங்கேஷ் முதன் முதலாக கதையின் நாயகனாக நடிக்கும் 'காயல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் தமயந்தி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'காயல்' இப்படத்தில் 'காலா', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற நடிகர் லிங்கேஷ் முதன் முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை காயத்ரி, ஐசக் வர்க்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ் திலக், ரேடியோ சிட்டி பரத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனுமோள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் கெனன்யா இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் தமயந்தி பேசுகையில்,'வேற்று சாதி ஆணை திருமணம் செய்துகொள்ளும்  பெண்ணிற்கும், அந்த பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதையை உருவாகி இருக்கிறது.

ஒரு பெண்ணிற்கு தன்னுடைய எதிர்காலத் துணையை தெரிவு செய்வதற்கான முழு உரிமை உண்டு என்பதையும், அதற்கான அனுமதியை இச்சமூகம் அவளுக்கு வழங்க வேண்டும் என்பதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறோம்.

கடல் சார்ந்த பகுதிகளான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும்' என்றார்.

நடிகை காயத்ரி கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், மலையாள நடிகை அனுமோள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.