சூர்யா நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரை போற்று' சீனாவிலுள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவாகி இருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டில் பட மாளிகையில் அல்லாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் 'சூரரை போற்று'. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகி வெற்றிப் பெற்ற இந்தப் படம் ஓஸ்கர் விருதிற்கு நேரடியாக பங்குபற்றியது. ஏ

தேனும் ஒரு பிரிவில் ஓஸ்கர் விருதும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது. பிறகு ஓஸ்கர் விருதின் இறுதிக்கட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்தியப் படங்களுக்கு சீன நாட்டில் பாரிய வரவேற்பு உண்டு. இந்தியில் வெளியான தங்கல், அந்தாதுன் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி பெரும் வசூலை வாரிக் குவித்தது.

இந்த நிலையில் 'சூரரைப்போற்று' படம் சீனா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற எண்ணத்தில் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் மாகாணத்தில் ஜூன் 11 ஆம திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.

இதன் மூலம் சீன நாட்டின் திரையுலகினர் இப்படத்தை கண்டு, அங்குள்ள படமாளிகையில் வெளியிட ஆர்வம் காட்டுவார்கள் என பட தயாரிப்புக் குழுவினர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

'சூரரைப் போற்று' மாண்டரின் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்குமா? இப்படம் சீனர்களை கவருமா? என்பது விரைவில் தெரியவரும்.