(நா.தனுஜா)

சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து, வலுப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்பட்டுவரும் சிவில் சமூகக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களின்படி, சமூகவலைத்தளங்களில் மதரீதியான சிறுபான்மையினரை இலக்குவைத்து வெறுப்புணர்வுப் பிரசாரங்களும் கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அதேவேளை பொதுபலசேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புக்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டுவருவதுடன் ஏனைய சிறுபான்மை இனங்களை இழிவுபடுத்தும் விதத்திலும் செயற்பட்டு வருவதனை ஊடக அறிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எனினும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்புவோருக்கு எதிராக உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவ்வமைப்புக்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டின் மார்ச் - ஜுன் மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட வெறுப்புணர்வுக்கருத்துக்கள் தொடர்பில் அரச சார்பற்ற அமைப்பொன்றினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் தேசியமொழிகள் மூன்றிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் வெறுப்புணர்வுப் பதிவுகளில் 58 சதவீதமானவை முஸ்லிம் சமூகத்தை அல்லது இஸ்லாமிய மதத்தைத் தாக்குவதாகவே அமைந்துள்ளன. அதேபோன்று 30 சதவீதமானவை கிறிஸ்தவ மதத்தையும் 5 சதவீதத்திற்கும் குறைவானவை தமிழ் இனம் அல்லது இந்து மதத்தைத் தாக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதேபோன்று சிங்களமொழியில் மாத்திரம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 79 சதவீதமான பதிவுகள் முஸ்லிம் இனத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தாக்கும் வகையில் அமைந்துள்ளன. தமிழ்மொழியில் செய்யப்பட்டுள்ள பதிவுகளில் 46 சதவீதமானவை தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும் 35 சதவீதமானவை இஸ்லாமியர்களையும் தாக்கும் விதமாக அமைந்துள்ளன.

முஸ்லிம் வைத்தியரான ஷாபி சிகாப்தீன் என்பவரால் சிங்களப்பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற விசாரணையில் 76 மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்டதுடன், இந்த வழக்கு இன்னமும் நிலுவையிலேயே உள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மேலும் சில சம்பவங்கள் தொடர்பிலும் கூறப்பட்டிருக்கிறது.