தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும்  முழுமையாக முடங்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த கள நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை அடுத்து அரசாங்கம் நேற்று இரவு 11 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை முழுமையான பயணத்தடையினை அறிவித்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் முழுமையாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் மாங்குளம் பகுதியில் வீதித்தடையில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற செயற்பாடுகளை வீடியோ புகைப்படம் எடுக்க  ஊடகவியலாளருக்கு தடை விதித்தனர்.

இதனை தொடர்ந்து மாங்குளம் நகரப்பகுதியில் கடைகள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலைமைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மாங்குளம் நகர் பகுதியில் நின்ற இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவ சோதனை சாவடிகளும் இராணுவ கெடுபிடிகளும் காணப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் தொடர்ந்து  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.