பெய்துவரும் தொடர் மழையால் கேகாலை மாவட்டம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக கேகாலை மாவட்டத்தில் 60 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் ஒருவர் பலியானதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை தொலங்கம கஸ்னாவ பிரதேசத்தில் நேற்று (13)பெய்த கடும் மழையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக பாதிப்படைந்துள்ளன.

அதில் ஒரு வீட்டில் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மண்ணில் புதையுண்டு பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவ்வீட்டில் மண்ணுக்குள் அகப்பட்டு பலியானவரின் மனைவியையும் ஏனைய 3 பேரையும் கிராம வாசிகள் மீட்டெடுத்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்தோடு வறக்காப்பொல நகரமும் அதனை அண்டிய பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஒரு வீட்டின் பின்புறம் மண்மேடு சரிந்து வீடு சேதமடைந்துள்ளது.

இதேவேளை, தெரணியகலை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரணியகலை, வறக்காப்பொல, எட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் பிரதேசங்களில் அனர்த்தம் ஏற்படுமிடத்து உடனடியாக அவர்களுக்கான உதவிகளை செய்யுமாறு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய கட்டளையிட்டுள்ளார். 

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மிகவும் பொறுப்புடன் மக்களுக்கு உதவி செய்யுமுகமாக பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் பொதுமக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.