(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்தி வைக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

நாடு இன்று காணப்படுகின்ற நிலையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

துறைமுக நகர சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு உட்படாததாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. இவ்வாறு பாராளுமன்றத்திற்கு அப்பால் ஒரு சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அது பாரதூரமானதாகும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் சீனி இறக்குமதி வரி சலுகை மோசடி என்பன பாராளுமன்றத்தினாலேயே அம்பலப்படுத்தப்பட்டன. எனவே துறைமுகநகர விவகாரங்கள் தொடர்பிலான அதிகாரங்கள் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

துறைமுக நகர் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் துறைக்கு வழங்குவதால் எவ்வித பிரயோசனமும் இலங்கைக்கு கிடைக்கப் பெறாது. எனவே அதனை அரச மயப்படுத்த வேண்டும். மாறாக முழுமையாக தனியார்துறைக்கு வழங்கினால் அடுத்த 30 வருடங்களுக்கு எம்மால் எவ்வித நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். ஆனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் இதன் மூலம் கிடைக்கப் பெறும் என்று அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

துறைமுக நகர் சட்ட மூலம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்களை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. காரணம் அதில் பல திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை மேற்கொள்ளாமல் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுமானால் கொழும்பு துறைமுக நகரானது கறுப்பு பணத்தை மாற்றுவதற்கான கேந்திரமாக மாற்றமடையும்.

இதனால் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும். இந்த விடயங்களை கருத்திற் கொண்டும், கொவிட் அச்சுறுத்தலுக்கு முக்கியத்துமளித்தும் துறைமுக நகர் குறித்த சட்ட மூலம் மீதான விவாதத்தை ஒத்தி வைக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம் என்றார்.