சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிதலுக்குப் பிறகு ஐ.சி.சி. ஆண்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவும், நியூஸிலாந்தும் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஐ.சி.சி. சார்பில் டெஸ்ட் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

இதில் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய போட்டிகளின் முடிவுகள் நீக்கப்பட்டன. 

தற்போதைய புதிப்பிப்பு மூலம் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் 100 சதவீதம் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் முடிவு 50 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 121 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியை விட ஒரு புள்ளிகள் குறைவாக பெற்ற நியூலாந்து 120 புள்ளுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஜூன் 18 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் எதிர்கொள்ளும்.

இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணி நான்வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

2017-18 ஆம் ஆண்டில் இ்ங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் வென்ற முடிவு நீக்கப்பட்டதால் 5 புள்ளிகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் இந்த சரிவை சந்தித்து இருக்கிறது. 

நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் புள்ளி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து மொத்தம் 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

அதேசமயம் 9 புள்ளிகளை பறிகொடுத்த தென்னாபிரிக்கா 80 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலிருந்து 7 ஆவது இடத்துக்கு சென்றது. 

தற்கிடையில் மேற்கிந்திய தீவுகள் பங்களாதேஷுக்கு எதிரான 2-0 என்ற தொடர் வெற்றியின் பின்னணியில் எட்டாம் இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையுடன் டெஸ்ட் தொடரையும் 0-0 என்ற கணக்கில் சமன் செய்தது. 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகளின் சிறந்த தரநிலை இதுவாகும்.

அதேநேரம் ஜிம்பாப்வேக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்ற பின்னர் பாகிஸ்தான் மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் எதுவித மாற்றமின்றி ஐந்தாவது இடத்திலேயே உள்ளது.

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முறையே 8, 9, 10 ஆகிய இடங்களில் உள்ளன.

தரவரிசை அட்டவணையில் இணைய அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இன்னும் போதுமான டெஸ்ட் விளையாடவில்லை.