மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியானது 'ஐ ரோட்' ( i road ) வேலைத்திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்படும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வீதியை அமைக்கும் பணியில் உள்ள தாமதம் குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 'ஐ ரோட் ' iroad வேலைத்திட்டத்தின் கீழ் வீதி அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னாரிலிருந்து, மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையான இந்த  வீதியை அகலப்படுத்த முடியாத நிலை காணப்படுவதினால் குறித்த வீதியை அமைக்கும் பணி தாமதமாகி வருகின்றது.

மேலும் குறித்த வீதியை அகலப்படுத்துவதினால் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் நிலையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் நேற்று (13) வியாழக்கிழமை மாலை உரிய அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், அப்பகுதியில் உள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த வீதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும்போது வீடு ஒன்றின் மதில் அகற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மேலும் குறித்த பகுதியில் கழிவு நீர் வடிகான் ஒன்றை அமைத்து வீதியை அகலப்படுத்தி செப்பனிடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்வரும் திங்கட்கிழமை(17) காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.