நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அந்தவகையில், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், கிளிநொச்சி, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இன்றையதினம் ரமழான் நோன்புப் பெருநாளை கொண்டாடி வரும் நிலையிலும் கொரோனா அச்சுறுத்தலால் முஸ்லிம் மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பித்து வீடுகளிலேயே நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை அதிகாலை 4 மணி வரை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா 

வவுனியாவில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன.

முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

கொரோனா மூன்றாவது அலை  அச்சம் காரணமாக நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இன்று மட்டக்களப்பு மாவட்டமும் முற்றாக முடங்கியுள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுள்ளதுடன் பிரதான சந்தை உட்பட  போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கி காணப்படுகின்றது.

முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதுடன்  தேவை இல்லாமல் வெளியில் செல்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மலையகம்

அரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (14) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் தடை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பெருந்தோட்ட நகரங்களும், புறநகர்ப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சுகாதாரம், மின்சாரம், நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைக் கொண்ட வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வீதிகளில் செல்வதை காணக்கூடியதாக இல்லை.

மலையக நகரங்கள் அனைத்தும்  முடங்கிய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில்  நுவரெலியா ,அட்டன்,பொகவந்தலாவை, கொட்டகலை, தலவாக்கலை, நோர்வூட் ,மஸ்கெலியா , பூண்டுலோயா ஆகிய நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் குறித்த நகரங்களில் தனியார் மருத்துவ நிலையங்கள் , பார்மஸிகள் திறக்கப்பட்டிருந்தன

மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களை தேவையற்ற முறையில் நகரங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும், வீதிகளிலும் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, தலவாக்கலை நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  

இதற்கான நடவடிக்கையை தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவரின் வழிகாட்டலின் கீழ் நகர சபை சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தலவாக்கலை நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.

இதன்படி பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

கிளிநொச்சி

நேற்று நள்ளிரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை நான்கு மணி வரை அமுலில் உள்ள  பயணத் தடை காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஏ9 பிரதான வீதியில் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

மக்களின் நடமாட்டம் இன்றி வீதி வெறிசோடியிருந்தது. இருப்பினும் வைத்தியசாலைக்கு செல்பவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அத்தோடு நோயாளர் காவு வண்டியும் வீதியில் காணமுடிந்தது.

வீதியெங்கும் இராணுவத்தினர் கடமையிலிருந்ததுடன், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உந்துருளிகளிலும் இராணுவத்தினர் ஆங்காங்கே  கடமைகளில் இருந்தனர்.

திருகோணமலை

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாட்டிற்கு அமைவாக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இன்றைய தினம் (14) திருகோணமலை நகரில் அனைத்து வர்த்தகநிலையங்களும் மூடப்பட்டு,  மத்திய பேரூந்து நிலையம் உட்பட மக்கள் நடமாட்டமின்றி திருகோணமலை நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம்

நாடு பூராகவும் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் வீடுகளைவிட்டு  வெளியேறாத வண்ணம் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். நகரப் பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

யாழ்ப்பாணம் குடாநாட்டில் பிரதான வீதிகளில்  ரோந்து நடவடிக்கையினை  இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிந்தது.

வீதிகளில் அத்தியாவசிய தேவை, வைத்திய சேவையை பெறும் நோக்கில் பயணிப்போர் தவிர்ந்த ஏனையோரை  இடை மறித்து எச்சரிக்கை செய்து  வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை 

இலங்கையில் இன்று புனித நோன்புப்பெருநாளை முஸ்லிங்கள் கொண்டாடிவரும் நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் அடங்கலாக அம்பாறை மாவட்டம் முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆள் நடமாற்றங்கள் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் சகல பிரதேசங்களும் காணப்படுகிறது. 

கொரோனா அலையின் தாக்கம் காரணமாக அரசினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் முஸ்லிங்கள் புனித நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடி வருகிறார்கள்.  

பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், வீதியால் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சுகாதார நடவடிக்கைகளையும் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளத்துடன் பள்ளிவாசல்கள் அடங்களாக சகல மத அனுஷ்டான இடங்களும், கடற்கரை தங்குமிட பிரதேசங்கள், பூங்காக்கள்,  பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.