சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மொத்தத்தில் சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் காசா மீது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர், மொத்தம் 580 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய போராளிகள் ஒரே இரவில் ரொக்கெட் தாக்குதலைத் தொடர்ந்ததை அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய உறைவிடம் அருகே படைகள் மற்றும் டேங்கர்களை நிறுத்துவதை முடுக்கி விட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேலிய இராணுவம் தனி ஒரு அறிக்கையில் தரை வழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதை மறுத்துள்ளது.

வியாழக்கிழமை இரவு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி மூன்று ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவை வடக்கு இஸ்ரேலின் கடற்பரப்பில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் மோதலுக்கு தீர்வு காண ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு கவுன்சில் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் இருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேலிய நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டதிலிருந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

1967 அரபு-இஸ்ரேலிய போரின்போது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்து 1980 இல் முழு நகரத்தையும் இணைத்தது, இது சர்வதேச சமூகத்தால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.