(செ.தேன்மொழி)

அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  மூதூர் - இஃபால் வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர் அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புபிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை ஏப்ரல் 21 குண்டு தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரை நீதிமன்ற உத்தரவுடன் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

கம்பளை மற்றும் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது சிறைவைக்கப்பட்டிருந்ததுடன் , இதன்போது கம்பளை பகுதியைச் சேர்ந்தவர் கேகாலை சிறைச்சாலையிலும் , காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் பொலன்னறுவை சிறைச்சாலையிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் , சந்தேக நபர்களிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்துவதற்காக, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.