எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது சட்டத்திற்கு முரணான மனித படுகொலைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. குற்றவாளிகளுடன் காணப்பட்ட தொடர்புகளை முழுமையாக மூடி மறைப்பதற்காகவே இந்த கொலைகள் இடம்பெறுகின்றன  என்று கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சட்டத்தின் ஊடாகவே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனநாயக நாடாகும். இங்கு சர்வாதிகார ஆட்சிக்கும் பாசிச ஆட்சிக்கும் இடமளிக்க முடியாது. எனவே சட்டத்திற்கு முரணாக இடம்பெற்றுள்ள கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு இந்த கொலைகள் தொடர்பில் துரிதமான பக்க சார்பற்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் காணொளி பதிவொன்றின் ஊடாக விசேட அறிவித்தலொன்றை விடுத்த போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டின் பாதுகாப்பு , சட்டம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கொலையாளர்கள் , கொள்ளையர்கள் , போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அற்ற பாதுகாப்பான நாடாக மாற வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இவை சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் உள்ளன.

ஆனால் சட்டத்தை மீறிய பாசிச ஆட்சிக்கு இடமளிக்க முடியாது. காரணம் இலங்கையில் காணப்படுவது சர்வாதிகார ஆட்சியல்ல. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியில் அரசாங்கத்திற்கு தேவையானதைப் போன்று மனிதப்படுகொலைகளைச் செய்ய இடமளிக்க முடியாது. ஆனால் தற்போது நாட்டில் கொலை அலை ஆரம்பித்துள்ளது. இந்த கொலை அலைக்குள் மக்களின் உரிமை , ஜனநாயகம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பில் எமது நாடு ஏற்கனவே சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் சந்தேகநபர்கள் அநீதியான முறையில் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவ்வாறான குற்றவாளிகளுக்கும் சட்ட ரீதியில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் எவ்வாறு இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ? குற்றவாளிகளுடன் காணப்பட்ட தொடர்புகளை முழுமையாக மூடி மறைப்பதற்காகவே இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ? நாட்டின் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் என்ன ஆயிற்று? மனித உரிமைகளுக்கா ஐக்கிய மக்கள் சக்தி பலத்துடன் முன்னிற்கும். அநீதியான கொலைகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

இவற்றை தடுப்பதற்கும் , மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும். சட்டமும் , நீதியும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தற்போது இடம்பெறுகின்ற கொலை அலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான கொலைகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்ற செயற்பாடுகளை நீங்கள் மதிக்கவில்லையா? அதன் காரணமாகவா இவ்வாறு சட்டத்திற்கு முரணாக சந்தேகநபர்கள் கொல்லப்படுகிறார்கள்? இந்த சகல கொலைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு நாட்டில் பலமான சட்டகட்டமைப்பை ஸ்தாபிப்பதோடு , குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து , மனித படுகொலைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.