(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் சுமார் 2500 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்படுகிறது.

எதிர்வரும் தினங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

எனவே தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 25 000 தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளது.

உருவாகியுள்ள இந்த அபாய நிலைமையை பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி கட்டுப்படுத்த முடியாது என்றும் சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இன்றும் 2 ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , புதனன்று 18 மரணங்களும் பதிவாகின. அத்தோடு நேற்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல் கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

நேற்று இரவு 11 மணியிலிருந்து மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகின்ற பிரதேசங்களும் பரவல் தீவரமாகக் காணப்படுகின்ற பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

2500 விட அதிக தொற்றாளர்கள் பதிவாகலாம்

நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எதிர்வரும் நாட்களில் இதனைவிடவு;ம அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் என்றும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்த ஏதேனுமொரு பிரஜை ஊடாகவே இங்கிலாந்து வைரஸ் இலங்கையிலும் நுழைந்திருக்கக் கூடும்.

இந்திய வைரசும் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரஜையொருவரின் மாதிரியிலேயே இனங்காணப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

எனவே இவ்விவகாரத்தில் தற்போது வழமையை விட மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

25 000 அதிகமானோர் சிகிச்சையில்

நாட்டில் முதன் முறையான புதனன்று 25 000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் ஒரே நாளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை நேற்று 2269 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 796 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 8802 பேர் குணமடைந்துள்ளதோடு , 24 932 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

கம்பஹா - திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு , காலி - அஹங்கம பொலிஸ் பிரிவில் கரந்துன்கொட, கொவியாபான, கஹவன்னகம மற்றும் தொம்மன்னபகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , ஹபராதுவ பொலிஸ் பிரிவில் லனு மோதர , பொனவிஸ்டாவ, கட்டுகுருந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , இரத்தினபுரி - பெல்மடுல்லை பொலிஸ் பிரிவில் தெனவக்க பாத்தகட , திப்பிட்டிகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுமம் , குருவிட்ட பொலிஸ் பிரிவில் குருவிட்ட மற்றும் தெல்கமுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

கொழும்பு - பாதுக்க பொலிஸ் பிரிவில் உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு , அம்பாறை - தெஹிணத்தகண்டி பொலிஸ் பிரிவில் - தெஹியத்தகண்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, நுவரெலியா - ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் - கோனகல்ல மற்றமு; 30 ஆம் ஏக்கர் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்று 24 கொவிட்ட மரணங்கள் பதிவாகின

2021 மே மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நேற்றைய தினம் (13) உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆகும்.