இந்திய அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றியிருந்த சச்சின், செவாக் ஆகியோரது சாதனைகளை தற்போது இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர்  அஸ்வின் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிக தொடர்நாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அஸ்வின் மிகவும் சிறப்பாக செயற்பட்டார்.

தனது சுழற்பந்துவீச்சால் மேற்கிந்திய அணி வீரர்களை திணறடித்த அஸ்வின், 17 விக்கெட்களை இத்தொடரில் கைப்பற்றினார்.

அதோடுமட்டுமல்லாமல் 2 சதங்களை விளாசிய அஸ்வின் 235 ஓட்டங்களையும் குவித்தார். இந்திய-மேற்கிந்திய அணிகளிடையேயான 4 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தொடர் மழையால் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடர் நாயகன் விருதை பெற்றார். அஸ்வின் பெறும் 6 ஆவது தொடர் நாயகன் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் செவாக் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 முறை தொடர்நாயகன் விருதை வென்றிருந்த நிலையில், அஸ்வின் அவர்களது சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 74 டெஸ்ட் தொடரில் பங்கேற்று 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதேபோல வீரேந்திர செவாக் 39 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 13 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 36 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், சச்சின், செவாக் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிக தொடர்நாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். 

இதனையடுத்து, 2 ஆவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் ஜக்ஸ் காலிஸ் 9 முறை வென்றுள்ளார். 3 ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான், அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோர்ன், நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லீ ஆகியோர் உள்ளனர். இவர்கள் 8-முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளனர். 

4 ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், மேற்கிந்திய தீவுகள் வீரர் சந்தர்போல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 7-முறை தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளனர். 

தற்போது இந்த பட்டியலில், அஸ்வின் 5 ஆவது இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.