முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைந்து முள்ளிவாய்க்காலில் வருடாந்தம் மே 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்விற்கு, நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.

கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது எனவும், பொது இடத்தில் ஒன்றுகூடுவதற்கு தடை பிறப்பிக்க கோரியும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.

ஏ.ஆர் 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.